வாழ்க்கையில் நல்ல திருப்பம் வேண்டுபவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம்; பிறக்கும் மனிதர்க்கெல்லாம் புகலிடமாக அமைந்திருக்கும் கோயில்; முன்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம்; வீடு கட்டுவதற்கு பூஜிக்கப்பட்ட கற்கள் வேண்டுவோர் செல்லவேண்டிய தலம்!

இத்தனை சிறப்புகளுக்கும் உரியதாக அமைந்திருக்கிறது ஓர் அற்புத திருத்தலம். நாகப்பட்டினம் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் திருத்தலம்தான் அந்தத் தலம். நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர்; இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு.

Temple Photo

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கும்  இந்தக் கோயிலில் 18 சித்தர்கள் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோர் வந்து பாடியும் வழிபட்டும் இருக்கின்றனர்.

தலத்தின் சிறப்பான விசேஷங்கள்: 

ஆன்மீக அன்பர்களால் நம்பி வழிபடும் முக்கிய விஷயங்கள் இவைதான்.  

* அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து காட்சி தந்த தலம் இது என்பதால், அக்னிக்கு உருவச் சிலை இந்தக் கோயிலில் அமைந்திருப்பது விசேஷம்.
 
* பண்டைய காலத்திலேயே சாதி மத வேறுபாடின்றி அப்பர், திருஞானசம்பந்தர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகிய ஐவரும் ஒரே சமயத்தில் ஒன்றாக அமர்ந்து ஸ்ரீ அக்னீஸ்வரரை வணங்கியது குறிப்பிடத் தக்கது.


 * கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் உரிய தோஷ நிவர்த்தி அருளும் தலம். அதற்கேற்ப இங்கே  பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.  இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு அடையலாம் என்கிறார்கள்.